சென்னை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணிக்கு அடையாளம் தெரியாத செல்ஃபோன் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் காவலரிடம் பேசிய பெண், 'இரவு 8 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச்செயலக கட்டடத்தில் வெடிகுண்டு வெடிக்கும்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது வீடுகளிலும் குண்டு வெடிக்கும். கோவையில் பார்வதி என்பவர் மனித வெடிகுண்டுகளை இதற்காக வைத்துள்ளார்' எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதனைத் தொடர்ந்து, அழைப்புவந்த செல்ஃபோன் எண்ணை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த அழைப்பு கோவை செட்டிபாளையம் அருகேயிருந்து வந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண், போத்தனூர் செட்டிபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த சகுந்தலா (42) எனத் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் சகுந்தலாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், சகுந்தலா அவரது சகோதரரிடம் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கேட்டு சகோதரர் தர மறுத்துள்ளார். இதனால் போத்தனூரில் வசிக்கும் உறவினர் பார்வதி (50) என்பவரை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். இதற்குப் பார்வதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலா, பார்வதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அதன்பின், அவரை சிக்கவைக்கவும் பழிவாங்கவும் தன் செல்போன் மூலம் காவல் துறையை தொடர்புகொண்டு பார்வதியின் பெயர், முகவரியை கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததோடு, பார்வதி வீட்டில் ஆள்களை வைத்து மனித வெடிகுண்டு வைத்தாகவும் கூறியுள்ளார்.
இதையறிந்த பார்வதி அளித்த புகாரின் பேரில் 294(b), 505(1),(b), 506(1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சகுந்தலா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
தனியார் கல்லூரி முன்னாள் பேராசிரியை தற்கொலை விவகாரம்: பேராசிரியர் கைது!