எப்போது மழை வந்தாலும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சர்க்கார்பதி மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்ம்பித்துவிடும். பச்சை பசேல் என இயற்கையின் தழுவலுக்கு நடுவே அமைந்துள்ளது, சர்க்கார்பதி. இங்கு வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இருப்பிட வசதி கிடையாது.
கடந்த வருடம் இதே நாளில் (ஆகஸ்ட் 9) இதே பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில்தான் சிறுமி சுந்தரி அடித்துச் செல்லப்பட்டாள். மழைநீரோடு கொஞ்சி விளையாட வேண்டிய பருவத்தில் சுந்தரியின் வாழ்க்கையோ முற்றுப்புள்ளி பெற்றது. இந்த துயரச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலையில் சர்க்கார்பதியில் வசிக்கும் மலைவாழ் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தருவதாக துறை சார்ந்த அலுவலர்கள் வாக்குறுதி அளித்தனர். என்ன ஆனது அந்த வாக்குறுதி? சுந்தரியின் தந்தையிடமே கேட்டோம்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை மாயம்!
இது குறித்து சுந்தரியின் தந்தை குஞ்சப்பன் கூறுகையில், “கடந்த வருடம் எட்டாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையினால் காட்டூர் கணால் பகுதியில் பாறை விழுந்தது. இதன் நடுவே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு நாங்கள் இருந்த வீடுகளுக்குள் மழை நீர் வந்தது. வெள்ளத்தின் வேகத்திற்கு பொறுக்காமல் வீடும் அதோடே அடித்துச் செல்லப்பட்டது,
கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு நடந்த இந்த வெள்ளப்பெருக்கினால் என் மகள் சுந்தரி தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டாள். ஒன்றும் தெரியாத 2 வயது குழந்தையை வீடு இல்லாமல் பறி கொடுத்துவிட்டேன்” என்றார்.
குழந்தை சுந்தரியை வெள்ளம் சுருட்டிய 15 நாட்களுக்கு பிறகு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டெடுத்தனர். அவளுடைய உயிரிழப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை மின்சார வாரிய குடியிருப்பில் தங்க வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறுமியின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தது. இதனை அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கினர்.
இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளைக் கண்ட துறை சார்ந்த அலுவலர்கள் வீடு கட்டித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். இவையெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது வரை மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு கட்டி தரப்படவில்லை. தற்போது சர்க்கார்பதியில் பெய்யும் மழை நீரில் அரசு இயந்திரங்களின் வாக்குறுதி மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது.
சுந்தரியின் நினைவஞ்சலியை அனுசரிக்கும் அவளது குடும்பத்தார் மட்டுமில்லாது, கிராம மக்களுக்கும் நிலையான குடியிருப்புதான் நிறைவேறாத கனவாக உள்ளது. ”இந்த வருடமும் மழை நிற்காமல் பெய்து கொண்டிக்கிறது. வெள்ளம் வந்தால் எங்கு போவது என தெரியவில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு பதற்றமாக உள்ளது” என்கிறார் சுந்தரியின் தந்தை.
சுந்தரியின் முதலாமாண்டு நினைவஞ்சலியை அனுசரிக்கும் அவளது குடும்பத்தார் மட்டுமில்லாது, கிராம மக்களுக்கும் நிலையான குடியிருப்புதான் நிறைவேறாதக் கனவாக உள்ளது.
மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் இங்குள்ள மக்கள் அச்சத்துடனே அந்த சிறிய வீட்டில் ஒடுங்கியுள்ளனர். விரைவில் வனத்துறையினர் மட்டும் வருவாய்த்துறையினர் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் இக்கிராம மக்கள். சுந்தரிகளை நினைவு கூர அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும். அவள் வெறும் நினைவு அல்ல... ஒரு சமூகத்தின் உரிமைக் குரல்...!
இதையும் படிங்க: வீடுகளை இழந்து நடுக்காட்டில் தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்...!