குமரி மாவட்டம் மார்த்தான்டம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். புதன்கிழமை இரவு களியக்காவிளை சந்தைவழியில் சோதனைச் சாவடியில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றபோது காரில் வந்த இருவர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓடினர். வில்சனை கொன்றவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சையது இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரைப் பிடித்து உளவுப்பிரிவு, குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
இவர்களுக்கும் வில்சன் கொலையாளிகளுக்கும் தொடர்புள்ளதா? இவர்கள் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களா? எனப் பல்வேறு கோணங்களில் உளவுப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் கைதுசெய்யப்பட்ட சையது இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொள்வதற்காக கோயம்புத்தூரிலிருந்து உளவுத் துறை அலுவலர்கள் பாலக்காடு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை - குமரியில் பரபரப்பு..!