கோயம்புத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப்பகுதிக்குள் வந்துள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு (நவ.10) மருதமலை வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கொண்ட கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது. அதில் 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது, பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன.
இதனைக்கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து விட்டு உடனடியாக மின் இணைப்புகளை துண்டித்தனர். மேலும், அருகில் இருந்த கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த அறக்கட்டளையைச்சேர்ந்தவர்கள் மின் நிலைய வளாகத்தில் இருந்து யானைகளை வெளியே விரட்டினர். தொடர்ந்து அந்த யானைகள் மருதமலை வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக சூழலில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் தென்பட்ட வெள்ளை கரடி - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி