கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை யானை தனியாகச் சுற்றிவருகிறது. இரவானால் சூர்யவம்சம் படத்தில் வரும் சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவார் என்பதுபோல, பாகுபலி யானை இரவானால்போதும் ஊருக்குள் புகுந்து வேளாண் பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பாகுபலி யானையைப் பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்த வனத் துறையினர் எடுத்த முயற்சிகள் கைக்கூடவில்லை. இதையடுத்து, ரேடியோ காலர் பொருத்தும் பணியை கடந்த மாதம் 28ஆம் தேதி வனத் துறையினர் நிறுத்திவைத்தனர்.
பாகுபலி யானை உலா
எனினும் பாகுபலி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனப்பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சுமார் 20 நாள்களுக்கும் மேலாக வனத் துறையினர் கண்ணில் அகப்படாமல் சுற்றிய பாகுபலி யானை, நேற்றிரவு (ஜூலை16) வனத்தை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பாலப்பட்டி சாலையில் உள்ள ஊமப்பாளையம் முனியப்பன் கோயில் அருகே ஆடி அசைந்து உலா வந்தது.
அப்போது சாலையோரம் இருந்த தனியார் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தனது முன்னங்காலால் மிதித்து தோட்டத்திற்குள் செல்ல முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி வீணானதை அடுத்து, மீண்டும் வனத்தை நோக்கி நடையைக் கட்டியது.
யானையைக் கண்காணிக்கக் கோரிக்கை
இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறும்போது, தனியார் தோட்டங்களுக்கு வன விலங்குகள் நுழையாமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளனர். இதில் மாலை முதல் காலை வரை மின் விநியோகம் இருக்கும். இதேபோன்று மற்ற இடங்களில் யானை மின் வேலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஏதாவது ஒரு இடத்தில் மின்சாரம் தாக்கும் இடர் உள்ளது. பாகுபலி யானையை உடனடியாகக் கண்காணிக்கும் வகையில் வனத் துறையினர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர்.
இதையும் படிங்க: இறந்து எலும்புக்கூடான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் யானை!