கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள வாட்டர்ஃபால்ஸ் எஸ்டேட் பகுதியில் மாணிக்கம் (60) என்னும் காவலாளி, இன்று (ஜூன் 4) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணிக்கத்தின் உடலை மருத்துவர் யாரும் உடற்கூராய்வு செய்யாமல் இழுத்தடிப்பதாக மாணிக்கத்தின் உறவினர்கள் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமியிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அமுல்கந்தசாமி. அங்கிருந்த மருத்துவர் மஞ்சுளாதேவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மஞ்சுளா தேவி, மருத்துவமனையில் தான் மட்டும் இருப்பதாகவும் தனக்கு நிறைய பணிச்சுமைகள் இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மருத்துவரை சமனதானப்படுத்திய அமுல்காந்தசாமி, உடற்கூராய்வு நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மாலை மாணிக்கத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் சார்பில் முதற்கட்டமாக யானை தாக்கி உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது.