கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், ஆனைக்கட்டி, மாங்கரை ஆகிய வனப்பகுதிகள் கேரளா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இரு மாநில வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயர்தல் அதிகளவில் காணப்படுகிறது.
குறிப்பாக பெரிய தடாகம், சின்ன தடாகம், மருதமலை பகுதிகளில் பெரிய தம்பி, சின்ன தம்பி, விநாயகன் ஆகிய காட்டு யானைகள் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் உணவுத் தேடி வருவதை வழக்கமாக கொண்டு உள்ளன. இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு பெரிய தம்பி என்ற யானை, சுமார் 30 கி.மீ தூரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் நெருக்கமாக வாழும் சரவணம்பட்டிக்குச் சென்றது.
இதனால் வனத்துறையினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். இதற்கு பின்னர் சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரு காட்டு யானைகள் மட்டும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களிடம் பரிட்சியமாக அடிக்கடி வந்து சென்றது.
அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு தண்ணீர் தேடியும், உணவு தேடியும் தினமும் இந்த யானைகள் வந்து சென்றன. இந்த யானைகள் இரண்டும் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகவும், அவற்றைப் பிடிக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக 2018ஆம் ஆண்டு விநாயகன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டனர். இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு சின்னதம்பி யானையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
முதுமலை புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட விநாயகன் யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து கூடலூர், பாடவயல் உள்ளிட்ட தமிழக வனப்பகுதிகளிலும் அருகிலுள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிக்குள்ளும் வாழ்ந்து வந்தது. அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டதாகவும், மலைவாழ் மக்களின் விவசாய பயிர்களை சேதப்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் குந்திகெரே வனப்பகுதியை ஒட்டிய எலசெட்டி கிராமத்தில் வைத்து விநாயகன் யானை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அதை கும்கி யானையாக மாற்ற திட்டமிட்ட கர்நாடக வனத்துறையினர், யானையை கட்டுப் படுத்தி பழக்குவதற்காக ராமப்புரா யானைகள் முகாமில் கரோல் எனப்படும் மரக்கூண்டில் அடைத்து பயிற்சி அளித்து வந்தனர்.
நான்குமாத பயிற்சிக்குப் பிறகு யானை பாகனின் உத்தரவை பின்பற்றும் நிலைக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி கரோலில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு கும்கி யானைக்கான துவக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ராமப்புரா யானைகள் முகாமில் விநாயகன் யானை திடீரென மயங்கி விழுந்தது.
வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்ததில் யானை இறந்துவிட்டது தெரியவந்தது. யானைக்குப் பிரேத பரிசோதனை செய்ததில், கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையைச் சேர்ந்த வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே விநாயகன் யானை இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த யானையை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதை அலட்சியப்படுத்தி தமிழக வனத்துறையினர் அதனைப் பிடித்து முதுமலையில் விட்டதால் தான் கர்நாடக வனத்துறையினரிடம் விநாயகன் யானை சிக்கி தற்போது உயிரிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கோயமுத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவரும் சூழலியல் ஆர்வலருமான முருகானந்தம் கூறுகையில், "சின்னதம்பி, விநாயகன் ஆகிய யானைகள் இப் பகுதியில் இருக்கும் வரை மற்ற காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருந்தன. இந்த இரு யானைகளையும் பிடித்து இடமாற்றம் செய்த பின்னர், கூட்டம் கூட்டமாக நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களையும், உடைமைகளையும் சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், விநாயகன் யானை உயிருடன் இருக்கும் வரை மனிதர்கள் யாரையும் தாக்கியது இல்லை. மிகவும் சாதுவான குணம் கொண்டது. இது உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களை சேதப்படுத்துவது என்று கூறி யானைகளை இடம்மாற்றுவது ஏற்புடையது அல்ல" என தெரிவித்தார்.
விநாயகன் உயிரிழப்பு குறித்து சூழலியல் ஆர்வலர் ஆபிரகாம் கூறுகையில், "யானைகளுக்கென தனி உணர்வுகளும், குடும்பங்களும் உள்ளது. அவற்றைப் பிரியும் யானைகள் தனித்து விடப்பட்ட காட்டில் சரியாக உணவு உட்கொள்ளாமல் மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று பல்வேறு பிரச்சனைகளைச் சந்திப்பதோடு, உயிரையும் இழக்கின்றன.
12 ஆண்டுகள் விநாயகன், சின்ன தம்பி யானைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து வந்துள்ளேன் அதில் இரண்டு யானைகளும் சாதுவான குணம் கொண்டது. அதிலும் விநாயகன் யானையின் கம்பீரம் எந்த யானைக்கும் வராது. அப்படிப்பட்ட யானை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர், வனத்துறையினர் காட்டு யானைகளை பாதுகாக்க நவீன முறைகளையும், அறிவியல் பூர்வ அணுகு முறைகளையும் பின்பற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இறைவன் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைப்பார்: இசையமைப்பாளர் டி.இமான்!