கோவை, பெரிய கடை வீதிப் பகுதி, கருப்பராயன் வீதியில் சாலையோரம் இருக்கும் மூன்று அடி விநாயகர் சிலை இன்று (ஆக. 20) அதிகாலை சேதமடைந்து காணப்பட்டுள்ளது. விநாயர் சதுர்த்தி நாள் நெருங்கி வரும் நிலையில் விநாயகர் சிலை சேதமடைந்து காணப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்களும், இந்து அமைப்புகளும் திரண்டனர். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
அங்கு சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனம் மோதி சிலைகள் சேதமடைந்திருக்குமா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் உடைத்திருப்பார்களோ என்ற கோணங்களில் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறுத்து பேசிய விவேகானந்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜலேந்தரன், ''விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது என்று பல விரோதிகள் எண்ணி வருகின்றனர். அவர்களில் யாரேனும் தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். அவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு