கோவை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள காளிமங்கலம், மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இங்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்துவருகிறது. இந்நிலையில், கிராமத்திற்கு அருகில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 600 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே யானை நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும் யானை தாக்குதல்களுக்கு மக்கள் ஆளாகக்கூடும் எனக்கூறி காளிமங்கலம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து வனப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். யானை வழித்தடங்களில் இது போன்ற பெரிய பெரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டால் யானைகள் பாதை மாறி ஊருக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இத்திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.