கோயம்புத்தூர்: அனைத்து உணவு தயாரிப்பின்போதும், முக்கிய உணவுப்பொருளாக தக்காளி சேர்க்கப்படுகிறது. இந்தநிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போன்று கடந்த ஆண்டும் பெட்ரோல் விலைக்கு ஈடாக தக்காளி விலை உயர்ந்து இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் விற்பனை அங்காடிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. மெல்ல மெல்ல உயர்ந்து, தற்போது கிலோ ஒன்றின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தக்காளி விலை அதிகரிப்பை சுட்டிக்காட்டும் விதமாக கோயம்புத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணிப் பொருளாளராக இருப்பவர், ஹக்கீம். இவரது மகளான அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்கும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் மேடையில் ஏறி, மணமக்களுக்குப் பரிசு வழங்கத் தயாராகினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தட்டு நிறைய தக்காளிகளை வைத்து மணமக்களுக்கு பரிசு வழங்கினர்.
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தக்காளி விலை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில், தற்போது மணமக்களுக்கு தக்காளிகளை பரிசாக வழங்கிய வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: குறுவை சாகுபடி - நெல் விதைகளை இருப்பு வைக்க அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்