கோயமுத்தூர் : திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதான புகார்கள் குறித்து சிறப்பு புலனாய்வு போலீஸ் பிரிவு எஸ்.பி., கங்காதரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மேலும் கடந்த 2018ம் ஆண்டு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் மீதான புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கூறி, ஊழல் தடுப்புச்சட்டம், கூட்டுச்சதி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்பட 6 பேர் மீதும், அவர்களுடன் தொடர்புடைய 11 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சோதனை
இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
22 இடங்களில் சோதனை
அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் வீட்டின் கதவு பூட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசனின் வீடு, எஸ்.பி.வேலுமணியின் மனைவி வித்யாதேவியின் சகோதரர் சண்முகராஜாவின் வீடு, கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி
செயலாளர் சந்திரசேகர் வீடு, மாநகராட்சி ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷின் வீடு, அவரது நிறுவனம், உள்ளிட்ட 22 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் குவிப்பு
சோதனையையொட்டி எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு முன்பு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
அதிமுகவினர் கோஷம்
சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தாமோதரன் எம்எல்ஏ உள்ளிட்ட 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் வேலுமணியின் வீட்டிற்கு வந்தனர். அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கு வந்தனர். ஆனால் யாரையும் போலீசார் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. மகளரணியினர் உட்பட அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் வீட்டின் கேட் முன்பாக அமர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர்.
வாக்குவாதம்
வடவள்ளியில் பொறியாளர் சந்திரசேகரின் வீட்டின் முன்பாக நூற்றுக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர். அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரிகார்டுகளை அமைத்து அதிமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். அங்கும் போலீசாருக்கு எதிராகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிமுகவினர் கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். இந்த இடங்களைத் தவிர வேலுமணியின் சகோதரர் அன்பரசன், பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் நடந்தும் நிறுவனங்களிலும் சோதனைகள் நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை
எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜாவின் வீட்டில் நடத்திய சோதனை மதியம் ஒரு மணிக்கு முடிந்தது. அதன்பின்னர் சண்முகராஜாவிடம் சோதனை செய்த 14 ஆவணங்கள் அவரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகவும், வீட்டில் நடந்த சோதனையில் ஆவணமோ, பொருளா கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்துவிட்டுச் சென்றனர்.
சோதனை நிறைவு
இதனிடையே வேலுமணி வீட்டில் 12 மணிநேரம் நடைபெற்ற வந்த சோதனை மாலை ஆறு மணி அளவில் முடிவடைந்தது. இதனை அடுத்து வீட்டில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், லாக்கர் சாவி மட்டும் கைப்பற்றப்பட்டதாக சான்றிதழ் அளித்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியேற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் போலீசாருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர் .பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வேனில் சென்றனர்.
இதையும் படிங்க : திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணி மைத்துனர்