கோவை பீளமேடு பகுதி ஹாட்கோ காலனியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(72) அவர் மனைவி பத்மாவதி (55). இவர்களுக்கு பாலாஜி(49), முரளி(45) என்ற இரு மகன்கள் உள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் முரளி பார்க்க சென்றுள்ளார். முரளியும் வராததால் சந்தேகமடைந்த பாலாஜி, அவர் தாய் பத்மாவதி ஆகியோர் பார்க்க சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற பாலாஜி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த பத்மாவதி அலைபேசி மூலம் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் பத்மாவதிக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவினை உடைத்து மயங்கி கிடந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது பாலாஜி உயிரிழந்தது தெரியவந்தது.
ஸ்ரீதர் மற்றும் முரளி ஆகிய இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த பத்மாவதிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்ததால் அவர் பெரும் பாதிப்பிலிருந்து தப்பினார்.
அதன்பின் காவல் துறையினர் அந்தப் பகுதியைச் சோதனை செய்ததில் இவர்கள் வீட்டு கழிவறைக்கு பின் ஒரு ஜெனரேட்டர் ரூம் இருப்பதும் அதிலிருந்த கோளாரால் வந்த விஷவாயு தாக்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா தொற்று! பொதுமக்கள் அச்சம்