கோயம்புத்தூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவப்பயிற்சி முகாமில் ராணுவ அலுவலர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஐந்து நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக உதகைக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு துணை குடியரசுத் தலைவர் சென்றுள்ளார். இன்று இரவு இங்கு ஓய்வெடுக்கும் துணை குடியரசுத் தலைவர் நாளை காலை சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை; குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்!