கோயம்புத்தூர்: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவை சித்தாபுதூரில் பாஜக மகளிரணி சார்பில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “கோடிக்கணக்கான மகளிர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர், பிரதமர் நரேந்திர மோடி. பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கோவை தெற்கு தொகுதியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று ‘சுயம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். சுய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 1,000 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, அவர்களுக்கு தையல் இயந்திரமும் வழங்க உள்ளோம். இதன் முதற்கட்டமாக இன்று (மார்ச் 8) 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி உள்ளோம். மேலும் 12 இடங்களில் இந்த மையம் தொடங்கப்பட உள்ளது.
பாஜக மகளிரணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையால் ஏற்பட்ட பதட்டமான சூழலால் தொழிலைத் தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழ்நாடு அரசு சரியாக கையாளாததால், அது தற்போது மிகப்பெரிய பூதமாக மாறி இருக்கிறது.
அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து, வலுவாக தேர்தலை சந்தித்தது. நாங்கள் ஆக்கப்பூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம். ஒரு கட்சியின் கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர்கள், தலைமை பற்றி சொன்ன கருத்துக்களால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது. இருப்பினும், உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் கருத்துக்கள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும், பலமான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்.
தற்போது ஏற்பட்ட மனக்காயங்களை ஆற்றும் வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில் அதிக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம். திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம்.
அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்துதான் பயப்பட வேண்டும். அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக் கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமைப் பண்பை வெளிப்படுத்தும் வகையில்தான். அதை திரித்து, அவர்களின் பர்சனாலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்னை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி நன்றாக உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிர்வாகிகள் விலகலால் பாஜகவிற்குப் பாதிப்பு இல்லை - கெத்தாகப் பேசிய வானதி சீனிவாசன்!