கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். இங்கு சிறுத்தை, கரடி, யானை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகளும் அரிதான சிங்கவால் குரங்குகளும் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள்.
வால்பாறை அருகே அரசு நிறுவனமான உள்பிரிவு நிறுவனத்தில் மாணிக்கா எஸ்டேட் பகுதியில் அரசிடம் முறையான அனுமதிபெறாமல் ரிசார்ட் செயல்பட்டுவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து நோட்டீஸ் அளித்தனர்.
ஆனால் எந்தவிதமான அறிவிப்பு வராததால் வால்பாறை வட்டாட்சியர், காவல் துறையினர் இன்று ரிசார்ட்டுக்கு சீல்வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முறையான அனுமதி பெறாமல் நடக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எச்சரித்தார்.