கோவையில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீர்வீழ்ச்சி, வரையாடு காட்சி முனை உள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மிகவும் கவர கூடியதாக உள்ளது இருவாச்சி காட்சிமுனை. வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் பாதுகாப்பை கருதி வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த காட்சி முனையிலிருந்து பார்த்தால் மலைப்பள்ளதாக்கும், மலைகளின் அழகு, காட்டு வழியாக ஓடும் நீரோடைகள், மேகங்களின் அழகு என அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
மேலும், இந்த பகுதியில் வருடம் முழுவதும் பறவைகளின் அபூர்வ இனமான இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளன. அதிகாலை, மாலை நேரங்களில் கூட்டமாக செல்வதை பார்க்கலாம். ஊட்டி, கொடைக்கானலுக்கு பிறகு வால்பாறைக்கு இருவாச்சி காட்சி முனை பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.