கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி அதிக அளவில் வாகனங்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக எண்ணி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆய்வாளர் சதீஷ் தலைமையில் காவல் துறையினர் வால்பாறை பிரதான சாலையான நல்லகாத்துபாலத்திலும், பொள்ளாச்சி சாலையான பிஏபி காலனி பாதையிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
அப்பகுதியில் வரும் வாகனங்களுக்கு ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு வண்ணம் பூசி வாகனங்கள் அடுத்தடுத்து வருகின்றனவா என்று ஆராய்ந்துவருகின்றனர். மேலும், அவசரத் தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் உரிய அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டும் ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்த கண்காணிப்பில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் இந்தத் தீவிர கண்காணிப்பினால் இருசக்கர வாகங்களின் வருகை குறைந்துள்ளது.
பொதுமக்களின் நலனை அறிந்து காவல் துறையினரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறும் மக்கள் : ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு