தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக ட்விட்டரில் வலியுறுத்திவருகிறார். இந்த முன்னெடுப்பை வரவேற்கும்விதமாக #FreeTNTemples #கோயில்அடிமைநிறுத்து ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, இவ்வியக்கத்திற்கு மாவட்டந்தோறும் ஆதரவு திரட்டும் வகையில், தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், கோயம்புத்தூர் மருதமலை முருகன் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில், சேலம் பாண்டுரங்கன் கோயில், பவானி சங்கமேஷ்வரர் கோயில், சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் கோயில், சென்னை மருந்தீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை சிவன் கோயில் ஆகிய 11 பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள், பொதுமக்கள் தேவாரம், கந்த சஷ்டி கவசம், அம்மன் பாடல்கள் உள்ளிட்ட பக்திப் பாடல்கள் பாடி விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கோயிலின் முன்புறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு #கோயில்அடிமைநிறுத்து என்ற பதாகையை ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.