பொள்ளாச்சி அடுத்துள்ள கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வட்டார காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் பேருந்தில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை ராஜா என்பவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதயைடுத்து அந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், லாட்டரி சீட்டுகளை கேரளாவில் வாங்கி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவின் பாலகம் அருகில் அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அதனையடுத்து, அவரிடம் இருந்த 130மது பாட்டில்கள் மற்றும் ரூ.7,780 பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சத்யா என்பவரை கைது செய்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.