கோவை : ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பையா வீதி பகுதிகளில் தங்கத்துக்கு போலியாக ஹால்மார்க் முத்திரை பதித்து விற்பனை செய்வதாக பிஐஎஸ் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பிஐஎஸ் கோவை கிளை தலைவர் மீனாட்சி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ராஜவீதி, கருப்பையா வீதியில் இயங்கி வந்த இரு மையங்களில் முறையான அனுமதியின்றி போலியாக தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பிஐஎஸ் அலுவலர்கள் கூறுகையில், "பொதுமக்கள் தரம் குறைவான தங்க நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘ஹால்மார்க்’ முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் மூலம் வியாபாரிகள் தரும் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் தரம் பதிவு செய்யப்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் 22 காரட் தங்கத்துக்கு 916 முத்திரை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 256 மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்திலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற விதிமுறை கடந்த ஆண்டு ஜூன் முதல் அமலுக்கு வந்தது.
தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாறாமல் இருக்க, முறையாக உரிமம் பெற்ற விற்பனையாளர்களின் விவரங்களை www.bis.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஹால்மார்க் முத்திரையிட்ட பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0422-2240141, 2249016, 2245984 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம் அல்லது புகார் குறித்த விவரங்களை cbto@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
விதிமுறைகளை மீறுவோருக்கு சட்டப்படி ஓராண்டுவரை சிறை தண்டனை, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை