திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பவித்ரன். நண்பர்களான இருவரும் கோவை மயிலேறிபாளையம் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் வடிவமைப்பாளர் (ஆர்க்கிடெக்ச்சர்) முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இருவரும் தண்ணீர் பந்தல் அடுத்த ஜெகநாதபுரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (பிப். 03) இரவு இவர்கள் இருவரும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து பீளமேடு ரயில் நிலையத்திலிருந்து ஹோப்ஸ் கல்லூரிக்கு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். இந்நிலையில், சென்னையிலிருந்து கோவைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்தது.
அப்போது, இருவர் மீது ரயில் மோதியதில், சிவாவும், பவித்தரனும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நண்பர் தண்டவாளத்திலிருந்து வெளியே குதித்து தப்பித்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து ரயில்வே காவல் துறையினர் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில் படிக்கட்டில் தூங்கிய இளைஞர் - தண்டவாளத்தில் விழுந்து உயிரிழப்பு