கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோவையில் அமைந்துள்ள உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் மற்றும் வாலாங்குளம் ஆகியவை பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, குளக்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாலாங்குளத்தில் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து வரும் மக்கள் விடுமுறை நாட்களில் தங்களுடைய நேரத்தை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர். மேலும் அங்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகுத்துறைக்கு எதிரே சிறிய அளவிலான துரித உணவகம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உணவகத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக அங்கு உள்ள கடைகளில் கோவை நகரில் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கக்கூடிய தர்பூசணி ஜூஸ் 75 ரூபாய்க்கும் ஒரு டீ 42.85 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் ஒரு முட்டை பப்ஸ் 38 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். இந்த விலை மற்ற கடைகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் சாமானிய மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் இவ்வளவு அதிகமான தொகையில் உணவு பொருட்கள் விற்கப்படுகிறது எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனை மாநகராட்சி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய விலைக்கு உணவுப்பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் கேட்டபோது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Camp fire முன் கெத்தாக நின்ற 'லியோ' படக்குழு - வைரலாகும் புகைப்படம்!