கோயம்புத்தூர்: சென்னை பூந்தமல்லியில் இருந்து கோயம்புத்தூர் பீளமேடு மதுபான குடோனுக்கு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. பவானியை சேர்ந்த செல்லப்பன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். கருமத்தம்பட்டி அருகே வந்தபோது அதிகாலை 4 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு சுவரில் ஏரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டிவந்த செல்லப்பன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு இடத்திற்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர், செல்லப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான லாரியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் இருந்துள்ளது. . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் சேதமான மதுபாட்டில்களின் மதிப்பை கணக்கிட்டனர். ஏற்கனவே இதே இடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திராவில் இருந்து பெயிண்ட் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கணவர் கைது!