கோயம்புத்தூர்: செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் முதல் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். மக்களவையில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் அவர்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, முன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது போலத் திருநங்கைகளுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியையும், திருநங்கையுமான பத்மினி கூறுகையில், "தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு பற்றிப் பேசி வருகிறோம். பெரும்பாலும் அரசியலில் இட ஒதுக்கீடு பற்றி தான் பேசுகிறோம்.
அரசியலில் பெண்களே இப்போது தான் பேசும் பொருளாக உள்ள நிலையில், திருநங்கைகளான நாங்கள் எங்கே இருக்கிறோம் என தெரியவில்லை. திருநங்கைகள் காட்சிப் பொருளாகவும், பேசும் பொருளாகவும் இருந்து கொண்டு வந்தால் எங்களுக்கான விடிவு எப்போது?.. இதை அரசும் நீதிமன்றங்களும் தான் தீர்மானிக்க முடியும். மக்களின் பார்வையில் திருநங்கைகள் மீதான கண்ணோட்டம் சற்று மாறியுள்ளது.
அது மட்டும் போதாது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே சமத்துவம். பெண்களுக்கு நிகராக நாங்களும் அவர்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம். இதை நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது போதாது. ஆணாதிக்கம் உள்ள இந்த சமூகத்தில் இது மிகக் குறைந்த சதவீதம். ஆண்களுக்கு இணையாக 50% இருந்தால் மட்டுமே சமத்துவம். 33 சதவீதம் போதாது. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது.
ஆனால் அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இது சரியல்ல திருநங்கைகளின் சமூகம், தற்போது வரை போராடிக் கொண்டுதான் உள்ளது, போராட வேண்டிய நிலை உள்ளது. அத்தியாவசிய தேவையிலிருந்து அடிப்படை தேவைகளைக் கேட்டுப் பெற வேண்டிய நிலை உள்ளது. உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினமாக அறிவித்திருந்தாலும், ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினமாக மாறி உள்ளோம். எங்களுடைய அவலங்கள் சற்று அதிகம். சமூகத்தில் புறக்கணிப்பு, வீட்டில் புறக்கணிப்பு, கல்வி தடைபடுதல், சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்.
உணர்வு சார்ந்து எங்களுடைய உடலை மாற்றிக் கொள்கிறோம். இந்த சூழலில் இவர்களுக்காகத் தனி கொள்கையைக் கொண்டு வந்தால், நன்றாக இருக்கும். உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி இரண்டு சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். பேராசிரியராக, காவல்துறை அதிகாரியாக, மருத்துவராக பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சாதித்து வருகின்றனர். இட ஒதுக்கீடு கொடுத்தால் பணி பாதுகாப்பு கிடைக்கும். இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் எங்களுடைய சமுதாயம் நாட்டின் வளர்ச்சிக்குக் கட்டாயம் பாடுபடும்.
தற்போது நான் பணி புரியும் கல்லூரியில், ஆய்வக உதவியாளர்களாக இரண்டு திருநங்கைகள் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்று ஒவ்வொரு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். திருநங்கைகளுக்கு மனரீதியான சிக்கல்கள், பாலியல் சுரண்டல்கள் என பல விதத்தில் துன்பங்கள் உள்ளது. இவற்றை போக்க அனைவரும் தன்னம்பிக்கை கொடுத்தால் மட்டும் போதும். கல்வி, வேலைவாய்ப்பு என எந்த சிக்கலும் இல்லாமல் சமமான வேலை வாய்ப்பு இருந்தால், தவறான பாதைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பொது மக்கள் மத்தியில் சமூக புரிதல் வேண்டும். திருநங்கைகள் குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டாலே மாற்றம் வரும்" என்று தெரிவித்தார்.