ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பக்தியின் காரணமாக பழனி, திருச்செந்தூர், மருதமலை, சபரிமலை, மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் அரசியல் யாத்திரை நடந்துவருவது கேலிக்கூத்தாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் எல். முருகன் உயர் நீதிமன்ற தடையை மீறி வேல் யாத்திரை நடத்திவருகிறார்.
இதற்கு எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராமரை வைத்து யாத்திரை சென்றால் தமிழ்நாட்டில் எதிர்ப்புவரும் என்பதால், முருகனை வைத்து யாத்திரை செல்வதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (நவ. 21) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஆதிதிராவிடர் பேரவை உள்ளிட்ட 18 அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், "சென்னை உயர் நீதிமன்றம் இந்த யாத்திரை ஆன்மிக யாத்திரை அல்ல, அரசியல் யாத்திரை என்று தடை விதித்தும் 10 நாள்களாக இதனை நடத்திவருகின்றனர். யாத்திரை நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் பாஜக மாநிலத் தலைவர் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை விமர்சித்துவருகிறார்.
வேல் யாத்திரை முடிந்து கூட்டங்கள் எல்லாம் முடிந்தபின்னர் தமிழ்நாடு காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது என்ற ஒரு நாடகத்தை நடத்திவருகின்றனர். கரோனா காலத்தில் கூட்டம் சேரக்கூடாது என்று இருக்கின்ற நிலையில் இவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அரசு பணியாளர் அல்லாத பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி!