கோயம்புத்தூர் (பொள்ளாச்சி): ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பல அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காண்பதற்காகவும் இங்கே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது வனவிலங்குகளை துன்புறுத்துவதாகவும், வனக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி மறை மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் ஆழியார் சோதனை சாவடி வழியாக வால்பாறை செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல தடை என புதிய கட்டுப்பாட்டை வனத் துறை விதித்து உள்ளது. மேலும் ஆழியார் சோதனை சாவடியை தாண்டி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதியில் செல்லக்கூடாது எனவும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பழனி கோயில் கருவறை புகைப்படங்கள் வெளியானது எப்படி? அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!