கோயம்புத்தூர்: கோவை பெரிய கடைவீதி தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் மத்திய அரசின் ’ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இ-ஷாரம் (E-Sharam) நல வாரிய திட்டம் ஆகியவற்றுக்கான அடையாள அட்டை வழங்கும் இலவச முகாமை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பெரிய கடைவீதியில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்தனர். அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து தரப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
![மத்திய அரசின் திட்டங்களை எந்தவித வித்தியாசமும் கருதாமல் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-bjp-vanathi-visu-tn10027_21082022125455_2108f_1661066695_305.jpg)
அதில் ஐந்து லட்ச ரூபாய்க்கான ’ஆயுஷ் மான்’ பாரத் காப்பீடு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதி உதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கும் இ-ஷாரம் திட்டம் ஆகியன முக்கியமானவை.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் காப்பீடுத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளத் தகுதியானவர்கள். அதன் அடிப்படையில் ’ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மற்றும் இ-ஷாரம் திட்டத்தில் பதிவு செய்வதற்கான இலவச முகாமில் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
![மத்திய அரசின் திட்டங்களை எந்தவித வித்தியாசமும் கருதாமல் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-bjp-vanathi-visu-tn10027_21082022125455_2108f_1661066695_1000.jpg)
ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும், அதிக தொழிலாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் இத்திட்டம் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இத்திட்டத்தில் இலவசமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இது குறித்து நான் சட்டப்பேரவையில் பேசிய பொழுது மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இத்திட்டத்தில் பயனாளிகள் உள்ளதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்தார். எனவே கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நமது மாநிலத்தில் அதிக அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எந்த விதமான வித்தியாசமும் கருதாமல் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு அமல்படுத்துத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.