கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 61 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அமமுக வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன், 16 சுயேச்சைகள் என 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும், 39 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பபெற இறுதி நாளான இன்று எந்த வேட்பாளரும் திரும்பப் பெறவில்லை. இதனால் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
அமமுக உள்ளிட்ட 15 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாக போட்டியிடும் அமமுகவிற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.