மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர். 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்தவர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காவலர் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.