கோயம்புத்தூர்: நாடெங்கும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. இதனையடுத்து பட்டாசுக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினசரி சுமார் 500 முதல் ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 2 நாட்களில் மட்டும் வழக்கத்தைவிடக் கூடுதலாகக் குப்பைகள் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று (நவ.13) தீபாவளி நாளில் மட்டும், கோயம்புத்தூரில் உள்ள 100 வார்டுகளிலும், மொத்தம் சுமார் 1,350 டன் குப்பை சேர்ந்துள்ளதாகவும், இந்தக் குப்பைகளை இன்று காலை முதல், கோவை மாநகர தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டம்.. சென்னையில் 148 இடங்களில் வெடி விபத்து - தீயணைப்புத்துறை தகவல்!
மேலும், பண்டிகை முடிந்த கையோடு தூய்மைப் பணியாளர்கள் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, சில பணியாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், விடுப்பில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடும் பட்சத்தில், தொய்வு ஏற்பட்டுள்ள பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, விரைந்து குப்பைகள் அகற்றப்படும் என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது, மாநகர பகுதிகளில் அரசு அனுமதி அளித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, 65 வழக்குகள் பதிவாகி இருப்பதாகக் கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.