கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் (பி.ஆர்.எஸ்.) ராஜேந்திரன் எனும் காவலர் தனது தாயார் கனகம் (வயது 75) உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.01) மாலை 6.30 மணியளவில் கனகம் நடைபயிற்சிக்காக வளாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த வாலிபர் ஒருவர், கனகத்தின் கழுத்திலிருந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பாப்பநாயக்கன்பாளையம் சாலை வழியாகத் தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனகம் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் உள்பட பலரும் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்த நிலையில், அந்நபர் எவரிடமும் பிடிபடாமல் தப்பி ஓடியுள்ளார்.
கோவை நகரில் கடந்த சில நாள்களாக நகைப் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பும் இதேபோல் சக்திவேல் என்ற காவலரின் 70 வயது தாயாரிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர் ஒரே ஆளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்டுகிறது.
மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளியடித்த வாலிபரைத் தேடி வருகிறார்கள். காவலர் பயிற்சி வளாகத்துக்குள்ளேயே மிகவும் துணிச்சலாக இரண்டாவது முறையாக இதுபோன்ற நகைப் பறிப்பு சம்பவம் அரங்கேயுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.