கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கோழிக்கடை கணேஷ். இவர், 1964ஆம் ஆண்டு முதல் திமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு வால்பாறை நகர மன்றத் தலைவராகவும், மூன்று முறை நகர செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தவர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வழக்கறிஞர் பால்பாண்டி என்பவரை திமுக நகர பொறுப்பாளராக தலைமைக் கழகம் அறிவித்தது. ஆனால் அவர், கட்சி நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும், கட்சி நிர்வாகிகளிடமும் சரிவர நடந்துகொள்வதில்லை எனப் புகார் எழுந்தது.
இதையடுத்து, அவரை பொறுப்பில் இருந்து நீக்கி மீண்டும் நகர செயலாளராக கோழிக்கடை கணேஷை நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், திமுக தலைமையிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பதாகவும், மீண்டும் கோழிக்கடை கணேஷை நகர பொறுப்பாளராக நியமிக்க பரிந்துரைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, கோழிக்கடை கணேஷின் ஆதரவாளர்கள் தென்றல் செல்வராஜ் வீட்டிலிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'திமுகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி பூசல்...!'