நொய்யல் நதியை தூர்வாரும் பணிக்காக கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் 230 கோடி ரூபாய் வழங்கி, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று கோவை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியிலிருந்து, செம்மாண்டம்பாளையம்வரை 72 கிலோ மீட்டர் தூரம் முதல் கட்டமாக தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர், “நொய்யல் நதியை அகலப்படுத்தி தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்ததோடு, அதற்கான பூமி பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என இம்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 174 கோடி ரூபாய் நொய்யல் ஆற்றுப் படுகையை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுபோல பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அவிநாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்து, வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
இதனையடுத்து நூறு ஆண்டுகள் பழமையான நொய்யல் நதியை புனரமைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளார். எனவே நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுததிவருகிறது. நீர் ஆதாரங்களை காப்பது நம் சந்ததிகளுக்கு மிகப்பெரிய சொத்து அதனை காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: செல்லூர் ராஜூ அறிவித்த கடன் திட்டம் கானல் நீர்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு