கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காடுவெட்டி பாளையம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு அருகே தலையில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முதலில் கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்தனர். இதையடுத்து, அவர்கள் அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், லாரி ஓட்டுநர் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சாலையோரம் லாரியை அணைக்காமல் அப்படியே நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளார். திடீரென இயங்க தொடங்கிய லாரி அவரை நோக்கி வந்தது, லாரியை தடுக்க முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
தொடர்ந்து, ஓட்டுநரின் ஆவணங்களைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஓட்டுநரின் பெயர் சுரேஷ்பாபு என்றும், அவர் சேலத்திலிருந்து அமேசான் நிறுவனத்துக்கான பொருள்களை லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று (பிப். 17) இரவு கோவை கருமத்தம்பட்டி பகுதிக்கு வந்ததும், அங்கு டெலிவரிக்கான பொருள்களை இறக்கிவிட்டு அன்னூர் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பகுதிக்குப் பொருள்களை விநியோகம் செய்ய செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், ஓட்டுநரின் உடலை உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஓட்டுநர் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாமியாரிடம் தோஷம் கழிப்பதற்காகச் சென்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு