கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனால் வனத்தில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இந்த நிலையில் பில்லூர் அணை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு கிராமப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் ஒரு பெண் யானை சுற்றி வந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் உடனடியாக தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி யானைக்கு வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கத்தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை 7.45 மணி அளவில் யானைக்கு மயக்க ஊசியை மருத்துவர் சுகுமார் செலுத்தினார்.
பின்னர் வனத்துறையினர் யானையின் கழுத்திலும், பின்னங்கால்களிலும் கயிறுகளைக் கட்டி யானையை நிறுத்த வைத்தனர். இதற்கு உதவியாக கும்கி யானை "சின்னத்தம்பி" அந்த காட்டு யானையை பிடிக்க உதவியாக பயன்படுத்தப்பட்டது.
மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதாகவும், இதனால் கடந்த சில வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேல் சிகிச்சைக்கு தேவைப்பட்டால் யானையைக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், மற்றவை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின்பு முடிவாகும் எனவும் தெரிவித்தார்.