கோயம்புத்தூர்: தடாகம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்த நிலையில் பெண் யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டு வெடியை வைத்த நிலையில் தவறுதலாக யானை கடித்துள்ளது. பின், யானையின் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் பல நாள்கள் உயிருக்கு போராடிய நிலையில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாட்டு வெடி வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதி ஓட்டியுள்ள இடங்களில் அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தால் வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இதனிடையே
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை, IOB காலணி, கல்வீரம்பாளையம், பொம்மனம்பாளையம், தாளியூர், கெம்பணுர், அட்டுகல், தடாகம், வீரபாண்டி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நேற்று (செப்.16) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: உ.பியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
வனப் பணியாளர்கள் மற்றும் சி.டபிள்யூ, சி .டி அமைப்பைச் சார்ந்த தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வில் உரிமை இல்லாத நாட்டு துப்பாக்கிகள், நாட்டு வெடிகள் (அவுட்டு காய்), வைத்திருத்தல் வனக் குற்றம் என்பதால் வரும் 30ஆம் தேதிக்குள் வனத்துறை, அல்லது காவல்துறை, மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது
மேலும், தவறும் பட்சத்தில் சட்ட விரோதமாக இவை வைக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மின்வேலிகள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டால் அதன் மூலம் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வனத்துறையினால் துண்டு அறிக்கை அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!