கோயம்புத்தூர்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை செய்யும் நபர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படைபெடுப்பர். மேலும் பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்புவர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இம்முறையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தின் சார்பாக, தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் தற்காலிகமாக பேருந்து நிலையங்களில் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
- சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து - மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
- சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து - கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
- மத்திய பேருந்து நிலையத்திலிருந்து - சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கம்.
- கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து - மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கம்.
மேற்கூறிய தற்காலிக ஏற்பாடானது வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்;
- கோவை - மதுரை - 100 பேருந்துகள்
- கோவை - திருச்சி - 80 பேருந்துகள்
- கோவை - தேனி - 50 பேருந்துகள்
- கோவை - சேலம் - 60 பேருந்துகள் என சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவை அனைத்து வரும் நவ.9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிசோரம் சட்டமன்றத் தேர்தல் 2023; வாக்குப்பதிவு தொடங்கியது!