கோயம்புத்தூர்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக யானைகள் பாதுகாப்பு தொடர்பான 2 நாட்கள் மாநாடு கோவையில் நேற்று (ஆகஸ்ட் 11) தொடங்கியது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு யானைகள் முகாம் மேலாண்மை தொடர்பான கையேட்டினை வெளியிட்டனர்.
தொடர்ந்து மாநாட்டில் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், "யானை வழித்தடங்களை கண்டறியவும், தற்போதைய நிலையில் அவற்றை பராமரிக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன. யானைகள் விரும்பும் பயிர்களை உட்கொள்ள வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். யானை வழித்தடங்களில் உள்ள சட்டவிரோத மின்வேலிகள், வணிக ரீதியிலான கட்டடங்களும் யானைகளின் வழித்தடத்தை பாதிக்கின்றன. யானைகளை பாதுகாப்பதில் சிறப்பாக பங்களித்து வருவோருக்கு புகழ் பெற்ற வன கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பெயரில் விருது வழங்கப்படும்" என தெரிவித்தார்.
பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, வளர்ப்பு யானைகள் மேலாண்மை, ஆதரவற்ற யானைக் குட்டிகள் மேலாண்மை குறித்த கையேடுகளை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், தமிழகத்தில் மலைதள பாதுகாப்பு பகுதிகளை வரைமுறைப்படுத்துவதில் சில குளறுபடிகள் உள்ளதாக கூறினார்.
மேலும், "ஒரு இடத்தில் மலையையொட்டி 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் கட்டுமானங்கள் கட்ட கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில், சில இடங்களில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களுக்கும் அதே விதிமுறை விதிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்தி, பாரபட்சம் இல்லாமல் விதிகள் வகுக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய அளவில் யானைகளுக்காக நடத்தப்படும் முதலாவது பிரமாண்டமான மாநாடாக இது அமைந்துள்ளது. இதை இனி ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டில் சில இடங்களை யானைகள் வழித்தடங்களாக அறிவிப்பதில் சந்தேகங்கள் உள்ளன. எனவே, அது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மலைதள பாதுகாப்பு பகுதிகளை வரையறை செய்வது குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக, அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும்போது வனத் துறையின் கருத்தை தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், தமிழக வனத்துறை சிறப்பாக பணியாற்றுவதால் யானைகளின் எண்ணிக்கை 200 வரை பெருகியுள்ளது என்றும், யானைகளையும், மனிதர்கள் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பது நமது கடமை என்றும், இதை செயல்படுத்துவதில் ஆங்காங்கே சில சிக்கல்கள் உள்ளன என்றும் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
“அதேநேரம் வன விலங்குகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம். மதுக்கரையில் கூட செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் யானைகள் ரயிலில் அடிபடாமல் இருக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காடுகளை பாதுகாக்கும் வகையில் வனத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.
மேலும், ஆனைகட்டி வனப் பகுதியில் ரிசார்ட் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், வன விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், வனப்பகுதியையொட்டி இருக்கும் குப்பைக் கிடங்குகளை அகற்றவும், ஈர நிலங்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாவும் தெரிவித்தார்.
தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்திருப்பது தொடர்பாக வனத் துறையின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, செங்கல் சூளை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், அது தொடர்பாக நாம் எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று தெரிவித்தார்.
மேலும், இம்மாநாட்டில் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, வண்டலூர் நவீன வன உயிரின பாதுகாப்பு நிலைய இயக்குநர் உதயன், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராம சுப்பிரமணியன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.