கோவை மருதமலை முருகன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரோனா வைரஸிலிருந்து உலகம் விடுபடவேண்டும் என்று நேற்று பழனியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று மருதமலை வந்துள்ளேன். தற்போது கரோனாவிலிருந்து விடுபட்டு தடுப்பூசிக்குள் நுழைந்துள்ளோம். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் பெருமைபட வேண்டும்.
முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், செய்தியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி ஊசியாக போடப்படுகிறது. இது பரிசோதனை அல்ல. இது அவர்களுக்கு அளிக்கும் பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்.
மருத்துவராக மட்டும் நான் பணியாற்றி இருந்தால் நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பேன். தற்போது, ஆளுநராக இருப்பதால் பொதுமக்களுக்கு போடும் போது நானும் போட்டுக் கொள்வேன். தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததற்கு முதலமைச்சருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.