கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான மூலம் கோவை வந்தடைந்தார். பின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ”தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதைக் குறிப்பிட்ட அவர் பிரதமர் பல வெளிநாடுகளுக்குச் சென்று ஏற்படுத்திய நல்லுறவும் பாரத தேசம் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் தான் தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் என்றார்.
அதேபோல் இதற்கு முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, அதில் எவ்வளவு தொழில் முனைவோர்கள் கிடைத்தார்கள், மக்களுக்கு எவ்வளவு பலன் தந்தது, எந்தெந்த நாடுகள் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள் இதைப் பற்றிய விவரங்கள் முழுவதுமாக தெரியவில்லை என குறிப்பிட்ட தமிழிசை செளந்தரராஜன் மாநாடு நடத்துவது பெரிதல்ல எனவும் அது எந்த அளவிற்கு அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ஒரு மாநிலத்தை மட்டுமே நினைத்து தொழில் முதலீட்டாளர்கள் வருவதில்லை எனவும் அவர்களுக்கு நாட்டின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். பாரத தேசத்திற்குள் இருக்கும் ஒரு மாநிலம், நமது மாநிலத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் ,தொழில் துறை அமைச்சர் போன்றவர்கள் சேர்ந்து தொழில் தொடங்க வாருங்கள் என்று கோரிக்கை வைத்திருந்ததன் பெயரில் முதலீட்டாளர்கள் வருகிறார்கள் என்றார்.
பாரதப் பிரதமர் திருச்சிக்கு வந்து பிரம்மாண்டமான விமான நிலையத்தைத் திறந்து சென்றார்கள். அதன் மூலம் பல லட்சம் பேர் விமானத்தில் பயணம் செய்யலாம். ஆனால், விமான நிலையத்தால் என்ன பிரயோஜனம் என்று கேட்டவர்கள் சென்னைக்கு அருகில் அவ்வளவு பிரச்சனையுடன் பேருந்து நிலையத்தைத் திறந்துள்ளனர். எதையுமே முழுமை அடையாமல் தான் இந்த அரசு செய்து வருகிறது.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், ராமர் கோயில் திறப்பு விழாவில் அனைவருக்கும் பங்கு உண்டு. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதே வேளையில் யாரை அழைக்க வேண்டும் என்பது கமிட்டியைச் சார்ந்தது. அவர்கள் அனைவரையும் அழைப்பார்கள். இவரை அழைக்கவில்லை அவரை அழைக்கவில்லை என அரசியல் ஆக்கக் கூடாது.
குடியரசுத் தலைவரை மரியாதைக்குரிய தலைவராகப் பார்த்துத் தான் மத்திய அரசை நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தேர்ந்தெடுத்தது. குடியரசுத் தலைவராக வரக்கூடாது என்று நினைத்தவர்கள் தற்போது குற்றம் சாட்டி வருகிறார்கள். குடியரசுத் தலைவருக்கு என்னென்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை நாடு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஐயப்ப சுவாமியைப் பார்க்க வேண்டும் என்று செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் அங்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்குத் தண்ணீர் கூட கொடுப்பதில்லை. குடிக்க வேண்டும் என்றால் குளிர்பானங்களைப் பணம் கொடுத்து வாங்கி குடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அரசாங்கம் என்பது எத்தனை பேர் வருகிறார்கள் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேட்பதற்கு அவரது ரசிகர்களுக்கு முழு உரிமை உள்ளது. விஜயகாந்த் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல பிரதமருக்கே அவர் மீது நல்ல மரியாதை இருப்பதால்தான் அவருக்கென தனி கட்டுரை எழுதி இருக்கிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதை முன்கூட்டியே கணிக்கிறது இன்றைய தமிழக அரசு - ஸ்டாலின் பெருமிதம்!