கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைதுசெய்தும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். தற்போது இந்த வழக்கில் நாகை திருவள்ளுவன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் டிசம்பர் 22ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்த மூவாயிரம் இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சுவர் இடிந்து 17 உயிர்களைக் கொன்ற நபர் நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்துவிட்டார். பட்டியலின மக்களின் நீதிக்காகப் போராடியவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பட்டியலின மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதும் ஒடுக்கப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதை எதிர்த்து, எங்கள் கட்சியைச் சேர்ந்த இந்து மதத்தினர் மூவாயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இவர்களது முடிவு குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, மூவாயிரம் பேர் இஸ்லாமியர்களாக மாறுவது குறித்து முறையான தகவல்கள் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறினர்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் விவகாரம்: திருமா போராட்டம்!