கோயம்புத்தூர்: காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் கார் வெடிப்பு வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்ஐஏ அதிகாரிகளுடன் கார் வெடிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விரைவில் வழக்கு அவர்களில் கையில் செல்லும். அதற்கான உதவிகள் காவல்துறை சார்பில் வழங்கப்படும். என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர்.
![சான்றிதழுடன் காவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-06-dgp-sylendrababu-byte-7208104_27102022185350_2710f_1666877030_184.jpg)
தமிழ்நாடு காவல்துறை வழக்கு விசாரணை சிறப்பாக கையாளப்பட்டது. குறுகிய காலத்தில் கைது செய்யப்பட்டு 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சமயம் 5 பேரை காவலில் எடுத்தும் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளிடம் வழக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் நடத்தும் மேல் விசாரணை ஆதாரங்கள் திரட்டப்பட்டால் இந்த வழக்கில் மேலும் கைது நடவடிக்கை இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: பாஜக பந்த் அறிவிப்பினை திரும்பப்பெற்று அமைதிக்கு உதவவேண்டும்: கோவை எம்.பி.