கோவை: கோவை நீதிமன்றம் அருகே ரவுடி கோகுல் அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு ரவுடி குரங்கு ஸ்ரீராம் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி கோகுல் ஆவார். பழிக்குப் பழியாக கோகுல் கொலை செய்யப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து குரங்கு ஸ்ரீராம் நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுக்கும் நபர்களும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதற்கிடையே கோவையை சேர்ந்த தமன்னா (எ) வினோதினி, இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் தோன்றி, மிரட்டும் விதமாக வீடியோ வெளியிட்டார்.
ஏற்கனவே அவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தமன்னா, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த பீளமேடு போலீசார், அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கஞ்சா வழக்கில் அவர் ஆஜராகாததால், அவரை பிடிக்க கோவை இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்றம், பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமன்னாவை, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை, தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து, தமன்னாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தனியாக உள்ள வீடுகளில் நகை, பணம் கொள்ளை: பிரபல கொள்ளையன் கைது