கோவை: நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். காங்கிரஸ் கமிட்டியின் மாநில குழு உறுப்பினர் மற்றும் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர் அப்பகுதியில் உள்ள இந்திராகாந்தி வணிக வளாகத்தை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக, சான்றிதழ் வாங்க வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் சான்றிதழில் கையெழுத்திட வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சின்னராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அளித்த ஆலோசனையின்படி சின்னராஜ், வட்டாட்சியர் கோகிலாமணியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள், கோகிலாமணியை கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து கோகிலாமணி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்