கோயம்புத்தூர்: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வன பயிற்சி கல்லூரி மற்றும் வனத்துறை வளாகத்தில் உள்ள வனமரபியல் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 6) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகை விதைகளை பார்வையிட்ட அவர், நீலகிரி வரையாடு திட்டத்துக்காக அலுவலகம் அமைக்கப்பட உள்ள கட்டடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய சுப்ரியா சாஹூ, “தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘நீலகிரி தார்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்கான அலுவலகம், தற்காலிகமாக கோவையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் திட்ட இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்படும். நமது மாநில விலங்கை பாதுகாப்பதுடன், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது வனத்துறையின் முக்கிய கடமை ஆகும். இதற்காகத்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாழ்விடங்கள் மீட்கப்படும். நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு என்ன காரணம் மற்றும் அதன் வாழ்விடங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பின்னர் அதன் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால், உடனடியாக அவை மீட்டெடுக்கப்படும். இந்த திட்டம் நமது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விலங்கு, புற்களை மட்டும்தான் அதிகளவில் விரும்பிச் சாப்பிடும். எனவே, இவற்றின் வாழ்விடங்களில் வளர்ந்து இருக்கும் அந்நிய வகை தாவரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, புற்கள் வளர்க்கப்படும்.
மேலும் முன்பு வாழ்ந்து வந்த பகுதிகளில் தற்போது அவை இல்லை என்றாலும், அந்தப் பகுதியில் அவை மீண்டும் விடப்பட்டு, அங்கு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி முகாமில் உள்ள யானைகள், கோவை அருகே உள்ள சாடிவயலுக்கு கொண்டு வந்தால் காட்டு யானைகளால் பிரச்னை ஏற்படும் என்று கூறுவது தவறு. அங்கு யானைகளை பாதுகாக்க அனைத்து வசதிகளும் உள்ளன. அதேபோல் சிறுமுகை பெத்திக்குட்டையில் வனவிலங்கு மறுவாழ்வு மையம் அமைப்பதால், சிறு விலங்குகள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்து சிகிச்சையும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதன்மை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி , “நீலகிரி வரையாடுகளின் இடம் பெயர்வை கண்டறிய ரேடியோ காலர் திட்டமும் அமல்படுத்தப்படும். மேலும் இந்த விலங்குக்கு ஏற்படும் கட்டி நோய் எதனால் வருகிறது என்பதைக் கண்டறிந்து, அவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் 'நீலகிரி வரையாடு திட்டம்': அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு