இந்தியா முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 அதிவிரைவு ரயில்களை தனியார் மயமாக்கும் விதமாக அமிதாப்காந்த் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி அதற்கான அரசாணையை இந்திய ரயில்வே வெளியிட்டது. இந்த அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, ரயில் நிலையம் மற்றும் ரயில்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், புதிய ஓய்வுதியத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையம் குட்செட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அரசாணை நகலை தீயிட்டு எரித்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
உடனடியாக அரசு தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று ரயில்வே ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'எலிகளை அழிக்க அதிமுக அரசு என்ன செய்தது?' - எம்எல்ஏ ஆடலரசன்