கோயம்புத்தூர்: கோவை மாநகரில் அண்மையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்வோரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், "ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில், வன்முறையைத் தூண்டும் விதமாக வீடியோ பதிவுகளை செய்யும் நபர்களில் சில இளம் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் வசித்து வரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் "பேன்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆண் நண்பர்களுடன் இணைந்து ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்வது, மேலும் புகைப்பிடிப்பது போன்ற வீடியோ, கத்தியை கொண்டு மிரட்டுவது போல வீடியோ போன்றவற்றை பதிவிட்டிருந்தார்.
தற்போது இதுபோன்று வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோவை வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் மாநகர போலீசார் இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை பிடிக்க கோவை மாநகர காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சில வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான குற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இது போன்று வன்முறையை தூண்டும் விதமான வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆகையால் காவல்துறையும், சைபர் கிரைமும் இதை கண்காணிப்பதற்காகவே தனிப்படை அமைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையும், இது போன்ற குற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது எனவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி இது போன்று சமூகவலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக ஆயுதங்களுடன் மற்றும் வன்முறையாக வீடியோ பதிவு செய்ததனால் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மார்ச் 8ஆம் தேதிக்கான ராசிபலன்!