கோயம்புத்தூர்: விமானங்கள் பாதுகாப்பாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்றடைவதில் முக்கியப்பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் (ATC - Air Traffic Control) சேவையைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி 'உலக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம்' கொண்டாடப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் விமானப்பயணம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலை மாறி, இன்று சாமானிய மக்களும் விமானப்பயணம் மேற்கொள்ளும் சூழல் கடந்த சில ஆண்டுகளில் உருவாகி இருக்கிறது.
இன்று நாள்தோறும் சர்வதேச நாடுகளுக்கிடையே நூற்றுக்கணக்கான விமானங்கள் பறக்கின்றன. லட்சக்கணக்கானோர் விமான சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது எவ்வாறு சாத்தியமாகின்றது என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
வாகனங்களையோ, ரயில்களையோ அல்லது கப்பல்களையோ நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஓர் இடத்தில் நிறுத்திவைக்க இயலும். ஆனால், விமானத்தைப் பொறுத்தவரையில் அது சாத்தியமில்லாத ஒன்று. ஓர் இடத்தில் இருந்து புறப்படும் விமானமானது, குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக தரை இறக்குவது விமானிகளுக்குச் சவாலான பணியாகவே கருதப்படுகிறது.
நான்கு வகை பணி
விமானப் பயணிகள் அனைவரும் விமானியை முழுமையாக நம்பி உள்ள சூழலில், விமானிகள் நம்புவது ஏர் டிராபிக் கண்ட்ரோலர் (ஏ.டி.சி) எனப்படும் வான் போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டாளர்களைத் தான்.
உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு குழுவினர் விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்குவதை உறுதி செய்கின்றனர்.
அதேபோல வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்கள் விமான நிலையங்களிலும், வானத்திலும் விமானிகளுக்கு வழிகாட்டி வருகின்றனர். விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் பாதுகாக்கும் சவால் நிறைந்த பணியை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் தரைக் கட்டுப்பாடு, டவர் கட்டுப்பாடு, புறப்பாடு கட்டுப்பாடு, ஏரியா கட்டுப்பாடு ஆகிய நான்கு பிரிவுகளில் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களின் பணி உள்ளன.
விமானத்தை எப்பொழுது இயக்க வேண்டும்? எப்பொழுது தரையிறக்க வேண்டும்? எப்பொழுது ஓடுதளத்தைப் பயன்படுத்த வேண்டும்? எந்த வேகத்தில் விமானத்தை இயக்க வேண்டும்? எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும்? உள்ளிட்டப் பல்வேறு தகவல்களை விமானிக்கு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்களே வழங்குகின்றனர்.
கடினமான நேரங்களில் சாமர்த்தியமான முடிவுகள்
விமானங்களில் உள்ள விமானிகளுடன் "ரேடார்" தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் தொடர்பில் இருக்கும் தரை கட்டுப்பாட்டு அலுவலர், விமானம் புறப்படும்போது எந்தவொரு பொருளோ, வாகனமோ மோதாதவாறு ஓடுதளத்தைப் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்கிறார்.
பின்னர் விமானியுடனான தொடர்பு டவர் கட்டுப்பாட்டு அலுவலரிடம் மாற்றப்பட்டு, அங்கிருக்கும் கட்டுப்பாட்டு அலுவலர் ஓடுதளம் பறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என சோதித்து விமானிக்குத் தகவல் வழங்குவார். இதையடுத்து விமானியுடனான தொடர்பு புறப்பாடு கட்டுப்பாட்டு அலுவலரிடம் மாற்றப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களை தரையிறங்கும் விமானங்களிடம் இருந்து பாதுகாப்பாகப் பிரித்து, அந்தந்த விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு அடுத்து விமானியுடனான தொடர்பு ஏரியா கட்டுப்பாட்டு அலுவலரிடம் மாற்றப்பட்டு, விமானி அந்தந்த இலக்கு விமான நிலையங்களுக்கு வழிநடத்தப்படுகிறார்.
வான் போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பது தவறுகளுக்கு இடம் கொடுக்க முடியாத மிகவும் பொறுப்பான பணி என்பதால் விதிகளை சரியாக புரிந்துணர்ந்து, சூழ்நிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப விமானிகளை சரியாக வழிநடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு அலுவலருக்கும் இருக்கிறது.
கடினமான சூழல்களில் கட்டுப்பாட்டு அலுவலர்களின் சாமர்த்தியமான முடிவுகளால் பல்வேறு விமான விபத்துக்களில் பெருமளவு உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையப் பணி சவாலானது
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் சவால்கள் குறித்து நம்மிடம் பேசிய கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன், "வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகே பணியமர்த்தப்படுகின்றனர்.
இத்துறையில் பணிபுரிவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தி வரும் எழுத்துத் தேர்வில் தகுதி பெற வேண்டும். மேலும் பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல்) மற்றும் பொறியியல் பட்டதாரிகள் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தப் பணியைப்பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் மிகவும் குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து 5 விழுக்காட்டிற்கும் குறைவான நபர்களே அலுவலர்களாக தேர்வாகி பணிபுரிந்து வருகின்றனர்' என கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'கோவை விமான நிலையத்தில் பணியாற்றுவது என்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் சூலூர் விமானப்படை தளம் மிக அருகில் இருப்பதால், விமான கட்டுப்பாட்டாளர்களின் பணி என்பது மிக கூர்மையாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை மிக அருகில் இருப்பதால் அதன் உயரத்தைக் கணக்கிட்டு விமானங்களை இயக்க வேண்டும். அதேபோல் சூலூர் விமானப்படை தளத்தில் இரவு, பகல் என தொடர்ச்சியாக பயிற்சி விமானங்கள் பறப்பதால், அதனை கண்காணித்து வழி நடத்த வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காந்திஜி குடை, நேதாஜியின் நாற்காலி - 'விடுதலைப் போரில் தமிழகம்' கண்காட்சியைக் காண மக்கள் ஆர்வம்!