கோயம்புத்தூர்: கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டு வருமானத்துக்கும் அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
எஸ்.பி.வேலுமணி அளித்த ஒப்பந்த அனுமதியின் பிரதிபலனாகவே, அவரது மகன் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் செய்துகொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.பி.வேலுமணி
இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு இடங்களில் இருந்து ரூ. 13 லட்சம் பணம், ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன.
அப்போது சோதனை நடைபெறும் இடத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு சம்பவ இடத்திலேயெ ரோஸ் மில்க் உள்ளிட்ட சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. இவை சோதனை குறித்த தகவல் முன்னரே கசிந்ததையே சுட்டிக்காட்டுவதாகவும் பலரும் விமர்சித்திருந்தனர்.
பின்னர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்ட சோதனையின்போது உறுதுணையாக இருந்த தொண்டர்களுக்கு நன்றி என குறிப்பிட்டு, லஞ்சஒழிப்புத் துறை சோதனைக்கு எதிராக கூடிய அதிமுக தொண்டர்கள் தொடர்பான காணொலியை, ட்விட்டரில் பதிவிட்டார் எஸ்.பி. வேலுமணி.
நண்பர் மீது புகார் மனு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை, திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையையே காட்டுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடுமையாக சாடினர்.
இந்நிலையில் இவரது சகோதரர் அன்பரசன், நேற்று (ஆக.16) கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், “எனக்கு தெரிந்த நண்பரான திருவேங்கடம், என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் கொடுக்காவிட்டால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறார். எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு திருவேங்கடம்தான் காரணம்.
பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு
அவர் என்னுடைய பெயருக்கும், எனது சகோதரர் எஸ்.பி.வேலுமணி பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பிவருகிறார். ஆகையால், திருவேங்கடம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 1 கோடிக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றியதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருவேங்கடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்