கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 930 கோடி செலவில் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாயிகள், தொழில்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரள மாநில எல்லையோர கிராமங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு கேரள எல்லையான கோபாலபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் ஆகியன அடுத்தடுத்து நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. கேரளா பகுதியான சித்தூர், நெம்மாற ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து பாலக்காடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் தணிகாசலம், பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சுமேஷ் அச்சுதன் ஆகியோர் கூறுகையில், கேரள மாநிலத்தில் உள்ள சித்தூர் நகராட்சி, கொழிஞ்சாம்பாறை, வடகரபதி, எரித்தேன்பதி, நல்லேபிள்ளை உள்ளிட்ட 11 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் ஆழியாறு அணையிலிருந்து வரும் தண்ணீரில் நம்பி உள்ளோம்.
பி.ஏ.பி. ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி.க்கு பதிலாக குறைவான தண்ணீரே வழங்கப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் மழை குறைந்தால் எங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இப்பகுதி மக்களை மேலும் கடுமையாக பாதிக்கும். ஆகவே இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக கேரள அரசு தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டங்கள் வலுப்பெறும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு தெரிவித்தனர்.
ஹோட்டல்கள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உள்ளூர் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி உத்தமர் என முதலமைச்சர் கூறினால் மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் - அண்ணாமலை